விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் 1.1.2022 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் வெளியிட்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இதர பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்நாட்களில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்களை கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட இதர பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் 13, 14, 27, 28-ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடக்கிறது. 20.12.2021 அன்று கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் முடிவு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
16,94,183 வாக்காளர்கள்
19.3.2021 அன்று வரை வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 164 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 53 ஆயிரத்து 716 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 215 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 பேர் இருந்தனர். இதில் பெயர் நீக்கம் கோரியவர்கள், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் என 1,959 பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. புதிதாக வாக்காளர் பட்டியலில் 2,811 ஆண்களும், 4,229 பெண்களும், மூன்றாம் பாலினத்தினர் 7 பேரும் ஆக மொத்தம் 7,047 பேர் சேர்க்கப்பட்டனர்.
இதன் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 53 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 213 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 94 ஆயிரத்து 183 பேர் உள்ளனர்.
பொதுமக்களின் பார்வைக்கு...
வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர், சப்-கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், நியமன வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள்
வருகிற 13, 14, 27, 28-ந் தேதிகளில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் கொடுக்கலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற தேவையான ஒத்துழைப்பை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.