திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வனத்துறை அலுவலகம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ளது. சம்பவத்தன்று வனக்காப்பாளர் பிச்சைமணியும், காவலாளி ஏழுமலையும் வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனத்துறை அலுவலகத்தின் உள்ளே புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வளாகத்தில் வளர்ந்திருந்த 3 சந்தன மரங்களை வெட்டி கடத்தினர்.
ஒரு சந்தன மரத்தை வெட்டிய கும்பல் அதனை அங்கேயே விட்டுச் சென்றனர். இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் சுதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக இருந்த காவலாளி ஏழுமலையை மாவட்ட வனத்துறை அலுவலர் சுதா பணியிடை நீக்கம் செய்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட வனச்சரக அலுவலர் மனோகரன் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனத்துறை அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் 2 பேரின் உருவம் தெளிவாகவும், மற்ற 2 பேரின் உருவம் தெளிவில்லாமலும் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வனத்துறை அலுவலக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த 2 மர்ம நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் தமிழரசி கூறுகையில், சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். புகைப்படம் வெளியிட்டுள்ள மர்ம நபர்கள் 2 பேர் குறித்து பொதுமக்கள் யாராவது தகவல் தெரிந்தால் அருகேயுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் அனைவரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றார்.