மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு பன்னீர்செல்வம் பகுதியில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையோரமாக ஏராளமான வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை வைத்து நடத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு நேற்று காலை வந்தனர். அப்போது கடையின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள். அந்த விளம்பர பலகைகளை லாரியில் ஏற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது பற்றிய தகவல் பரவியதும் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அவசர அவசரமாக தங்களது கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

அப்போது ஒரு சில வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கூறும்போது, அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுகின்றனர். ஒருசில கடைகளுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதே கிடையாது. எனவே பாரபட்சமின்றி அனைத்து கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், என்றனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தால் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.

ஒரு சில வியாபாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் மாதந்தோறும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டினார்கள். அப்போது நெடுஞ்சாலைத்துறை ஊழியரை பார்த்து வியாபாரி ஒருவர், இவர்தான் மாதந்தோறும் பணம் வாங்குகிறார், என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வியாபாரிகள் தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள், என்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்