கரூர்,
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் தேசியக்கட்சி, மாநிலக்கட்சி, இடதுசாரி, வலது சாரி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பல பிரிவு கட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதாக இல்லை. விவசாய கமிஷனை நடைமுறைப்படுத்தினால் தான் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தமிழ்நாடு வறட்சி மாநிலம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வறட்சியால் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்பது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நீரா இறக்குவதற்கு ஏற்கனவே உரிமம் இருக்கும் போது, மறுபடியும் நீரா இறக்க அனுமதி வழங்கியிருப்பது புரியாத புதிராக உள்ளது.
நீரா
நீரா போதை பொருள் கிடையாது என கூறுகின்றனர். போதையே இல்லாத நீராவிற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது. எங்களை பொறுத்தவரை நீரா ஒரு சுடுசோறு. கள் ஒரு பழைய சோறு. பதநீர் ஒரு கலப்பட சோறு. இவை 3-ம் உணவுப்பட்டியலின் கீழ்தான் வருகிறது. இவற்றை இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமையே ஆகும். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேல் கள்ளுக்கு தடை விதித்து இருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
வெள்ளை அறிக்கை
ஒரு கோர்ட்டு சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இன்னொரு கோர்ட்டு சீமை கருவேல மரங்களை அகற்ற கூடாது என்று உத்தரவிடுகிறது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த பிரச்சினையில் வேளாண்மை துறையும் வாய் திறக்காதது ஆச்சரியமாக உள்ளது. அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினையால், கரூருக்கு அரசு மருத்துவ கல்லூரி வருவது தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகி மாரப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.