மாவட்ட செய்திகள்

தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: மனைவியுடன் கள்ளக்காதலன் கைது

பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் கட்டிட தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில், மனைவியுடன் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

பண்ருட்டி,

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(வயது 33). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி அனிதா(22). இவர்களுக்கு பிரதீஷ்(1) என்ற மகன் உள்ளார். கடந்த 14-ந்தேதி பண்ருட்டி சென்று வருவதாக கூறிச்சென்ற ராமன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மாயமான ராமனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி, பணிக்கன்குப்பத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ராமன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காடாம்புலியூர் குமரய்யா, புதுப்பேட்டை முருகேசன் மற்றும் போலீசார், ராமனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராமன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் குமரய்யா, முருகேசன் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில் முதலாவதாக ராமன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி அவர், யார் யாரிடம் அதிகமாக பேசி உள்ளார் என்று விசாரணை நடத்தினர்.

அதில் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சந்தோஷ்குமார்(19) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இவர் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ராமன் மாயமான அன்றைய தினம், தனது வீட்டில் இருந்து சென்ற போது அவருடன் சந்தோஷ்குமாரும் சென்றதை அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து சந்தோஷ்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அவர் சொர்ணாவூர் கிராம நிர்வாக அலுவலர் இளஞ்செழியனிடம் சரணடைந்தார். இதுபற்றி அறிந்த, காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

ராமன், அனிதா ஆகியோர் எனது சொந்த கிராமமான சொர்ணாவூரில் கடந்த ஆண்டு நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தனர். அங்கு சென்ற நான், ராமன், அவரது மனைவியிடம் பேசி பழகினேன். இந்த பழக்கத்தால், ராமனின் வீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.

இந்த நிலையில் ராமன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவராக இருந்துள்ளார். இதனால் என்னை தனது ஆசைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். அதற்கு நானும் உடன்பட்டேன். இதையடுத்து அடிக்கடி ராமன் எனக்கு போன் செய்து அழைத்து, தனது ஆசையை நிறைவேற்றி வந்தார்.

இதற்கிடையே, எனக்கு அனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தோம். ஒரு கட்டத்தில் ஓரினச்சேர்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு நான் மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை கட்டாயப்படுத்தி ராமன், அவருடைய ஆசைக்கு இணங்க செய்து வந்தார்.

இதையடுத்து, அனிதாவிடம் இதுபற்றி தெரிவித்தேன். அப்போது அவர், ராமனை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் இருவரும் சேர்ந்து ராமனை கொலை செய்வது என்று முடிவு செய்து, திட்டம் தீட்டினோம்.

அதன்படி கடந்த 14-ந்தேதி எனக்கு ராமன் போன் செய்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். அப்போது, மது பாட்டில் ஒன்றை, வாங்கி அதில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து எடுத்து சென்றேன். இருவரும் வழக்கம் போல் பணிக்கன்குப்பத்தில் உள்ள முந்திரிதோப்புக்கு சென்று, அங்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டோம்.

பின்னர் ராமனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்தேன். தூக்க மாத்திரை கலந்து இருப்பது பற்றி தெரியாமல், அவர் அதை குடித்து முடித்த, சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் கைலியை எடுத்து ராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவது பற்றி அறிந்தவுடன், எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று அறிந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சந்தோஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராமனின் மனைவி அனிதாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது