வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். 19-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 22-ந் தேதி மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேலூர் தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனுதாக்கல் செய்துவருகிறார்கள். 4-வது நாளான நேற்று ஆரணியை சேர்ந்த சுகுமார், கதிரவன், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த ஏ.ஜி.சண்முகம் ஆகிய 3 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக மனுதாக்கல் செய்தனர்.
சென்னையை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவர் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு டெபாசிட் தொகை செலுத்துவதற்காக மதுக்கடை பார்களில் காலி மதுபாட்டில்களை சேகரித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு வாங்குவதற்காக வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பத்தை அதிகாரிகள் வழங்கினர். ஆனால் அவர் தனக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே தமிழில் விண்ணப்பம் வழங்கவேண்டும் என்று கூறினார். அதற்கு அதிகாரிகள் தமிழில் விண்ணப்பம் இல்லை என்று கூறினர்.
இதனால் விண்ணப்பத்தை வாங்காமல் வெளியே வந்த அவர் தமிழ் வாழ்க என்று கோஷமிட்டார். அத்துடன் தனக்கு தமிழில் விண்ணப்பம் வழங்கும்வரை கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறிவிட்டு சென்றார்.
கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே சென்ற அவர் அங்கு திடீரென ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் அவரிடம் தமிழில் விண்ணப்பம் எழுதிவந்தால் அதை ஏற்றுக்கொள்வதாக அதிகாரிகள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.