பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள வெள்ளாற்றில் தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வந்தது. சிலர் குழுவாக சேர்ந்து ஓரிடத்தில் மணலை சேகரித்து வைத்து, பின்னர் அவற்றை லாரிகளில் வெளிமாவட்டங்களுக்கு கடத்தி வந்தனர். மேலும் இரவு நேரங்களில் பலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி வந்தனர். இதையடுத்து மணல் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த கோரி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியும், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிலர் வெள்ளாற்றில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு மணல் அள்ளிக்கொண்டு இருந்ததை பார்த்த செம்பேரி இளைஞர்கள், விவசாயிகள் மணல் கடத்தல்காரர்களை தட்டிக்கேட்டனர். அப்போது ஆத்திரமடைந்த இருதரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டனர்.
இதற்கிடையே மணல் கடத்தலை தடுத்த செம்பேரியை சேர்ந்த தங்கராசு மகன் பாலாஜி (24) மற்றும் கோவிந்தசாமி மகன் மணிகண்டன்(25) ஆகிய 2 பேரையும் மணல் கடத்தல்காரர்கள் முள்ளுக்குறிச்சி முந்திரிகாட்டிற்கு கடத்தி சென்று, அங்கே அவர்களை தாக்கியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த செம்பேரி கிராம மக்கள் உருட்டு கட்டைகளுடன், ஆதனங்குறிச்சி கிராமத்திற்குள் நுழைந்து, அங்கே நின்ற பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த திருமுருகனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட 2 பேரையும் போலீசார் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி நேற்று செம்பேரி வெள்ளாற்றில் மணல் கடத்தல் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கடலூர் கனிம மற்றும் சுரங்கத்துறை துணை ஆட்சியர் விஜயலட்சுமி, விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, திட்டக்குடி தாசில்தார் (பொறுப்பு) சிவக்குமார், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சிவகண்டன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
பின்னர் கலெக்டர் ஆய்வை முடித்துவிட்டு காரில் ஏறி புறப்பட முயன்றார். அப்போது செம்பேரி கிராம மக்கள், கலெக்டரின் காரை மறித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காரில் இருந்து இறங்கிய கலெக்டர் தண்டபாணியிடம், வெள்ளாற்றில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும், மணல் கடத்தலில் ஈடுபடும் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கூறினர்.
இதையடுத்து கலெக்டர் தண்டபாணி, அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் இருமாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.