மாவட்ட செய்திகள்

முதல்-மந்திரி பட்னாவிஸ் ராஜினாமா: சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க வழிபிறந்தது

மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவரது ராஜினாமாவால் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க வழி பிறந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க இயலவில்லை.

முதல்-மந்திரி பதவி, மந்திரிசபையில் சரிபாதி இடங்கள் ஆகிய சிவசேனாவின் கோரிக்கைகளை பாரதீய ஜனதா ஏற்காததால் அந்த கூட்டணியில் பிரச்சினை வெடித்தது.

பாரதீய ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை தனித்தனியாக அரசு அமைக்க கவர்னர் அழைத்தும், அந்த கட்சிகளால் இயலாமல் போனது. இதையடுத்து அங்கு கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா, கொள்கையில் முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டியது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமையும் என சரத்பவார் கடந்த 22-ந் தேதி அறிவித்தார்.

ஆனால் அன்று இரவோடு இரவாக, 105 இடங்களை பெற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி, 54 இடங்களில் வென்ற தேசியவாத காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரியது. அதையடுத்து 23-ந் தேதி அதிகாலை 5.37 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி ரத்தானது. தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசு அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் இது பற்றிய நிகழ்வுகள் வெளியுலகுக்கு தெரிய வரவில்லை.

அதே நாள் காலை 8 மணிக்கு மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று அது தொடர்பான காட்சிகள் டெலிவிஷன் சானல்களில் வெளியானபோது நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சட்டசபையில் 30-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அஜித்பவாரின் முடிவில் கட்சிக்கு தொடர்பு இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

மேலும், அதிரடியாக தேவேந்திர பட்னாவிஸ் அரசு அமைந்ததால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தன.

உடனே அக்கட்சிகள், ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டசபையை தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் வழக்கு தொடுத்தன.

இந்த வழக்கை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறை நாளாக இருந்தபோதும், சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சய் கன்னா அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள், ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தும், தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்தும் கவர்னர் எழுதிய கடிதங்களை திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் அந்த கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செவ்வாய்க்கிழமை காலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தனர்.

இதற்கிடையே பெரும்பான்மை பலம் உள்ள தங்களை உடனடியாக அரசு அமைக்க அழைக்க வேண்டும் என சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவர்னர் மாளிகை சென்று, கடிதம் கொடுத்தனர்.

மேலும் ஆட்சி அமைக்க தங்களிடம் போதுமான பலம் இருப்பதை காட்டும் வகையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பு நடத்தினர். அதில் 162 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக அந்த கட்சி தலைவர்கள் அறிவித்தனர். இது பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியது.

இந்த நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடுத்த வழக்கில் நேற்று காலை, மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

அதில், தேவேந்திர பட்னாவிஸ் அரசு இன்று (புதன்கிழமை) சட்டசபையை கூட்டி, மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இடைக்கால சபாநாயகரை நியமித்து, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடவடிக்கையை நடத்த வேண்டும், வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பு அல்ல, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதம் செய்தால், அது குதிரை பேரத்துக்கு வழிநடத்தி விட வாய்ப்பு உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சிவசேனா தலைமையில் உருவான கூட்டணியின் கை ஓங்கி விட்டதால், சட்டசபையில் பாரதீய ஜனதா பலப்பரீட்சையை சந்திக்குமா அல்லது பின்வாங்குமா என்ற கேள்வி எழுந்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாரதீய ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். மும்பையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்-மந்திரி அஜித்பவாரும் சந்தித்து பேசினர்.

பிற்பகல் 2 மணியளவில் திடீர் திருப்பமாக அஜித்பவார் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். அவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் கடிதத்தில் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. பிற்பகல் 3.30 மணியளவில் அவர் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், அஜித்பவார் ஆதரவு அளிப்பதாக கூறியதன் அடிப்படையில் ஆட்சி அமைத்தோம். தற்போது அவர் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டதால், எங்களுக்கு போதிய பலம் இல்லை. எனவே நான் பதவியை ராஜினாமா செய்ய போகிறேன் என்றார்.

மேலும், சட்டசபையில் பாரதீய ஜனதா பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும் எனவும் அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இதன் மூலம் நாட்டையே அதிரவைக்கும் வகையில் அமைந்த பாரதீய ஜனதா தலைமையிலான அரசு 4 நாளில் முடிவுக்கு வந்து உள்ளது.

இத்தனை பரபரப்புக்கு மத்தியில் இடைக்கால சபாநாயகராக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த காளிதாஸ் கோலம்கர் நியமிக்கப்பட்டார். கவர்னர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பரபரப்பான சூழ்நிலையில் இன்று மராட்டிய சட்டசபை கூடுகிறது. இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்கர் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகிவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடவடிக்கைக்கு இடம் இல்லாமல் போய் விட்டது.

அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்க வழி பிறந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்