ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே பாம்பன்விளையில், பகுதிநேர ரேஷன் கடை ஒன்று உள்ளது. இங்கு வாரத்தில் புதன், வியாழன் ஆகிய தினங்களில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். அதன்படி, கடந்த 26ந் தேதி கடை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர், விற்பனையாளர் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரேஷன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை விற்பனையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே, அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களின் இருப்பு நிலையை சரி பார்த்தார். அப்போது, தலா 50 கிலோ எடையுள்ள 2 மூடை அரிசி, ஒரு மூடை சீனி ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து அரிசி, சீனியை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, ராஜாக்கமங்கலம் பயிற்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.