பொள்ளாச்சி
வால்பாறை தொகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செனற ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறக்கும்படை அதிகாரிகள்
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை முக்கோணத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காரில் சோதனை
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அதற்குள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.75 ஆயிரம் இருந்தது. உடனே அதிகாரிகள் அந்த காரில் இருந்தவரிடம் விசாரணை செய்தனர்.
அதில் அவர், ஒடையகுளத்தை சேர்ந்த கங்கேஸ்வரன் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமியிடம் ஒப்படைத்தனர்.
ரூ.1 லட்சம் பறிமுதல்
அதுபோன்று பொள்ளாச்சி அருகே ரெட்டியார்மடம் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உமாமகேஸ்வரி தலைமை யிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.98 ஆயிரத்து 570 இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் அதிகாரி துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. வால்பாறை தொகுதியில் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 570 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.