பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது, ராஜாஜிநகர் வணிக வளாகம். அந்த கட்டிடம் உள்பட 2 கட்டிடங்கள் ஹட்கோவில் அடமானம் வைக்கப்பட்டு, கடன் பெறப்பட்டு இருந்தது. அந்த கடன் தொகையை மாநகராட்சி திரும்ப செலுத்தியது.
இதையடுத்து அந்த கட்டிட ஆவணங்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த ஆவணங்களை துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் மாநகராட்சி மேயர் கங்காம்பிகே மற்றும் கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் வழங்கினர். அதன் பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சியில் பா.ஜனதா ஆட்சி செய்தபோது, 11 கட்டிடங்கள் வங்கியில் அடமானம் வைத்து ரூ.2,389 கோடி கடன் பெறப்பட்டது. இதில் கெம்பேகவுடா அருங்காட்சியகம், மேயோ ஹால் கட்டிடம், மல்லேசுவரம் மார்க்கெட், ஜான்சன் மார்க்கெட் ஆகிய கட்டிடங்களை மீட்டுள்ளோம்.
இப்போது ராஜாஜிநகரில் உள்ள வணிக வளாகம் மற்றும் டானேரி ரோட்டில் உள்ள கால்நடை வதைக் கூட கட்டிடத்தை மீட்டுள்ளோம். அதற்குரிய கடன் தொகை ரூ.1,088 கோடியை திரும்ப செலுத்தி இருக்கிறோம்.
மேலும் சிட்டி மார்க்கெட், கலாசிபாளையம் மார்க்கெட் உள்ளிட்ட கட்டிடங்களும் விரைவில் மீட்கப்படும். பெங்களூரு மாநகராட்சி தற்போது பொருளாதார ரீதியாக பலம் பெற்று வருகிறது. இதற்கு நாங்கள் கடனை திரும்ப செலுத்தி வருவதே சாட்சி ஆகும்.
நடப்பு ஆண்டில் ரூ.3,000 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.2,031 கோடி வரி வசூலாகியுள்ளது. வருகிற மார்ச் மாதத்திற்குள் சொத்து வரி வசூல் இலக்கை அடைவோம்.
கடந்த ஆண்டு (2017) சொத்து வரி பாக்கியை வசூலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதில் இதுவரை ரூ.300 கோடி வசூலாகியுள்ளது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களிடம் இருந்து இரு மடங்கு வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டிட திட்ட ஒப்புதல் பெற்றபடி கட்டிடங்கள் கட்டவேண்டும். ஆனால் அதை மீறி கட்டிடங்கள் கட்டப்படுகிறது. மாநகராட்சியில் வசூலாகும் சொத்து வரி, அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க போதுமானதாக இருக்கும். பெரிய பணிகளை மேற்கொள்ள மாநில அரசு அதிகளவில் நிதி ஒதுக்குகிறது.
பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இந்திரா உணவகத்தில் காபி, டீ, வழங்கப்படும். இதற்கு இன்னும் விலை நிர்ணயம் செய்யவில்லை.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.