அணைக்கட்டு
நகையை அடகுவைத்தார்
பள்ளிகொண்டாவில், குடியாத்தம் சாலையில் விஷால் (வயது 48) என்பவர் நகை மற்றும் அடகுக் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று முன்தினம் ஒருவர் வந்தார். அவர் 10 கிராம் எடை கொண்ட நகையை அடமானம் வைத்து, ரூ.40 ஆயிரம் கேட்டுள்ளார். நகையை வாங்கி பார்த்த நகைக்கடைக்காரர் விஷால் ரூ.35 ஆயிரம் தருவதாக கூறி உள்ளார்.
அதைத்தொடர்ந்து அந்த நபர் பள்ளிகொண்டா காமராஜர் நகர் பகுதியில் வசிப்பதாகவும், அதற்கான விலாசத்தை கொடுத்து விட்டு ரூ.35 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
போலிநகை
அதன்பிறகு அந்த நபர் கொடுத்த நகையை நகைக்கடை உரிமையாளர் பரிசோதனை செய்தபோது அது போலி நகை என்பது தெரியவந்தது. உடனே அவர் அந்த நபரை அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.
அவர் கொடுத்த விலாசத்தில் போய் பார்த்தபோது அதுவும் பொய்யான விலாசம் என தெரியவந்தது. இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் விஷால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.
போலீஸ் வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் பள்ளிகொண்ட பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். போலி நகையை அடமானம் வைத்து ரூ.35 ஆயிரத்தை மோசடியாக பெற்று சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.