எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மளிகை கடை
விளாத்திகுளம் காமராஜ் நகரை சேர்ந்த கனிராஜ் மகன் ஸ்டாலின் (வயது 43). இவர் விளாத்திகுளம் மார்க்கெட் எம்.ஜி.ஆர் சிலை அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து கொண்ட அவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று காலையில் கடைப்பகுதியில் சுத்தம் செய்வதற்காக இளங்கோவன் என்பவர் வந்துள்ளார். அப்போது கடையின் வெறிப்புற பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கடை உரிமையாளருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
ரூ.80 ஆயிரம் திருட்டு
பதறிப்போன ஸ்டாலின் கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்துள்ளது. கடைக்குள் சென்று அவர் பார்த்தபோது, கல்லா பெட்டியில் அவர் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஸ்டாலின் கடையை பூட்டிவிட்டு சென்ற பிறகு, நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர் நள்ளிரவில் கடைக்கு வந்துள்ளார். கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், கல்லா பெட்டியில் இருந்த ரூ.80 ஆயிரத்தை திருடி சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.
மர்மநபருக்கு வலைவீச்சு
இதை தொடர்ந்து விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கடையில் பதிவாகியிருந்த மர்மநபரின் ரேகைகளை பதிவு செய்தனர். இதனடிப்படையில் கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.