மாவட்ட செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே, விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை- பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 45), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், குப்புசாமி வீட்டின் முன்புற இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள கதவை உடைக்க முயன்றனர். ஆனால் கதவை உடைக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், அங்கு கிடந்த அரிவாள் மற்றும் கடப்பாரையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். பின்னர் இவர்கள் மணக்குப்பம் வடக்கு தெருவில் உள்ள விவசாயி ரமேஷ் (42) வீட்டிற்கு சென்று அவருடைய வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த கொள்ளையர்கள், கடப்பாரை மற்றும் அரிவாளை அங்குள்ள குப்பையில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதனிடையே நேற்று காலை ரமேஷ் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக ரமேஷின் தம்பி ராஜா, தாய் சந்திரா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டதாகவும், தற்போது அவர்கள் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதும், அவர்களின் மருத்துவ செலவுக்காக ரமேஷ் தனக்கு தெரிந்த சிலரிடம் கடன் வாங்கி வைத்திருந்த ரூ.6 லட்சம், நகையுடன் சேர்ந்து கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.12 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்