மும்பை,
நவிமும்பை ஜே.என்.பி.டி. துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களில் வெளிநாட்டிற்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள் கடத்தி செல்லப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் துறைமுக பகுதியில் ஒரு குடோனில் வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர்களில் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு கன்டெய்னரில் தடை செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பால்கரில் உள்ள குடோனில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வலி நிவாரண மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.
இது தொடர்பாக போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பிற்கு வழங்க இந்த மாத்திரைகள் கடத்தப்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.