சேலம்,
சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி ரவுண்டானா அருகே சாலையை விரிவுப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அந்த பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் வகையில் வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.
இந்த ஆக்கிரமிப்பை தாமாகவே அகற்றிவிடுமாறு அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதுவரை அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். இதையொட்டி போலீஸ் உதவி கமிஷனர் அன்பு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அதே பகுதியில் வேப்பமரம், அரசமரம் நடுவே இருந்த சிறிய கோவிலின் முன்பகுதி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அதை இடிக்க அதிகாரிகள் முற்பட்டனர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அந்த கோவிலின் முன்பகுதி பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.