கோவை,
கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் அதன் தலைவர் சரவணமுத்து தலைமையில் கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயனை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அவர் அங்கு இல்லை என்பதால், அவருடைய நேர்முக உதவியாரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி கல்வி அதிகாரி, காலிப்பணியிட பட்டியல் எதையும் அறிவிக்காமலேயே விதிமுறைக்கு முரணாக கலந்தாய்வு நடத்தி 27 ஆசிரியர்களை பணிமாறுதல் செய்து உள்ளார். மேலும் காலிப்பணியிடங்களை ஆசிரியர்கள் தகுதி தேர்வு மூலம் நிரப்பாமல், பணிமாறுதல் மூலமாகவே நிரப்பியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு பெறும்போதுதான் அந்த பணியிடம் பட்டதாரி பணியிடமாக மாறும். ஆனால் அவர், இடைநிலை ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் கொடுத்துவிட்டு, அந்த பணியிடத்தை பட்டதாரி பணியிடமாக மாற்றி உள்ளார். இதுதவிர அவர் அரசு ஆணைக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.