பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் படைப்புத்திறமையை மேம் படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் குறுவளமைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டார வளமையங்களுக்கு உட்பட்ட குறுவளமைய அளவில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
இதில் பெரம்பலூர் குறுவள மையங்களை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் என 26 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் 32 படைப்புகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு எனும் தலைப்பில் ஆரோக்கியம்-நலவாழ்வு, போக்கு வரத்து-தகவல்தொடர்பு, கழிவு மேலாண்மை-நீர்பாசன பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கருத்துக்களை விளக்கும் வகையில் படைப்புகள் இருந்தன.
ஆம்புலன்சிற்கு வழிவிடும் வகையில் அமைக்கப்பட்ட வேகத்தடை, மின்சார சேமிப்பின் அவசியம், கணித முற்றொருமைகளின் விளக்கம், கணிதவியலின் பகு-பகா எண்கள் பற்றிய விளக்க சட்டம், 1967-ம் ஆண்டு வடக்கு லண்டனில் பயன்பாட்டுக்கு வந்த முதல் ஏ.டி.எம். எந்திரம் உருவான விதம் பற்றிய படைப்பு, காடுகளை அழிப்பதால் விலங்கினங்களின் வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றத்தின் தீய விளைவுகள்-அதனை சரிசெய்வதற்கான வழிமுறைகள் பற்றிய படைப்பு உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் காண்போரை கவரும் வகையில் இருந்தன.
மேலும் நகைகளை அணி வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிவியல் ரீதியாக விளக்கி ஒரு படைப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் மோதிரம் அணிவதால் மூளையின் செயல்திறன் கூடும், செயின்-நெக்லஸ் அணிவதால் உடலுக்கும், தலைக்கும் உள்ள சக்திஓட்டம் சீராக இருக்கும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கியிருந்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் திரளானோர் இந்த கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
வரகு, கம்பு, கேழ்வரகு, திணை, பட்டாணி உள்ளிட்ட பயிர்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து நலமுடன் வாழ் வதற்கான ஆலோசனைகள் குறித்து மாணவி ஒருவர் பாட்டு பாடியபடியே விளக்கம் அளித்ததை பார்வையாளர்கள் ரசித்து பார்த்தனர். அப்போது நமது உணவு முறையின் மாற்றத்தால் உடல்பருமன் உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுகின்றன.
மேலும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றால் நிலம் மாசுபாடு அடைகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் நாம் உண்ணுவதற்கு உணவு அவசியம் என்பதை விளக்கும் வகையில் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி... என கணீர் குரலில் மாணவி பாடிக்கொண்டே விளக்கம் அளித்தது கண்காட்சியில் புதுமையாக இருந்தது.
இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த படைப்புகளை பார்வையிட்டு சிறப்பாக செய்திருந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவீந் திரன் செய்திருந்தார்.