கருங்கல்,
கடந்த சில நாட்களாக கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதனால் கடல் அலையின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்ததுடன், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவும் அறிகுறி காணப்படுகிறது.
அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரி மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கன்னியாகுமரி, குளச்சல் உள்பட பெரும்பாலான கடலோர பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக கரையை நோக்கி வந்த வண்ணம் இருந்தன.
சில இடங்களில் கரையோர குடியிருப்புகள் வரை கடல்நீர் வந்து சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். அங்கு பலத்த காற்றும் வீசியது. அதிக உயரத்தில் அலைகள் எழும்பி கரையில் உள்ள பாறைகளில் மோதி சிதறின.
நேற்று வள்ளவிளை மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் இருந்த 2 வீடுகள் ராட்சத அலைகளால் இடிந்து விழுந்துவிட்டன. மேலும், 65 வீடுகள் பலத்த சேதம் அடைந்து இடியும் நிலையில் இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறினார்கள்.
இதேபோல் மார்த்தாண்டன்துறை கிராமத்தில் கடற்கரையில் உள்ள ஆலயத்தின் கொடிமரத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்த கொடிமரத்தை தாங்கி நிற்கும் பீடத்தை அலைகள் சேதப்படுத்திவிட்டன. இதனால் கொடிமரத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரிய கயிறு மூலம் இழுத்து கட்டி வைத்துள்ளனர்.
இதே போல் அங்குள்ள சமூக நலக்கூடமும் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்து வருகிறது. அங்குள்ள அலைதடுப்பு சுவர் சேதம் அடைந்து இருப்பதால், கடற்கரையோரத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வள்ளவிளையில் நிறுத்தி இருந்த அரசு பஸ் ஒன்றின் மேற்கூரை பலத்த காற்றில் தூக்கி வீசப்பட்டது.
குளச்சல் பகுதிகளான சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு, மண்டைக் காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையை நோக்கி வந்தன. இதன்காரணமாக வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
தங்களது கட்டுமரம், வள்ளங்களை மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
கடியப்பட்டணத்தில் அந்தோணியார் தெருவில் உள்ள 12 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். சூறைக்காற்று வீசியதால் சில வீடுகளின் ஓட்டுக் கூரைகளும் சேதம் அடைந்தன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் அமைத்திருக்கும் அலைதடுப்பு சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடல் சீற்றத்தில் 200 மீட்டர் தூரம் வரை சேதமடைந்தது. அலை தடுப்பு சுவர் சீரமைக்கப்படாததால் தற்போது ஏற்பட்ட சீற்றத்தால் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துவிட்டது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து அலை தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று கூறினார்கள்.