மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டும், குழியுமான சாலை

திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என்.கார்டன் பகுதியில் நீண்ட நாட்களாக சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வாவிபாளையம் கிளை சார்பில் ஜி.என்.கார்டன் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வாவிபாளையம் கிளை செயலாளர் அழகு தலைமை தாங்கினார். கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அப்போது குண்டும், குழியுமாக காணப்படும் சாலையால் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் வந்து செல்லும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகளும், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவதாகவும், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர் என்றும், உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நாற்று நடும் போராட்டம்

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள கருப்பராயன் கோவில் முன்பு குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில் அனைவரும் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நெருப்பெரிச்சல் முதல் ஜி.என்.கார்டன் பாப்பண்ணன்நகர் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பனிட்டு, விரிவுப்படுத்த வேண்டும். அந்த பகுதி முழுவதும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். பாப்பண்ணன்நகர், முத்துமுருகன் லே-அவுட் ஆகிய பகுதிகளுக்கு முறையாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட உதவி கமிஷனர் செல்வநாயகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்