உப்பிடமங்கலம்,
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தில் வாரத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆகிய 2 நாட்கள் மாட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில் பசு மாடுகள், எருமைகள், காளை மாடுகள், கன்றுகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இந்த சந்தையில் மாடுகளை வாங்கும் வியாபாரிகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு இறைச்சிக்காக வாகனங்கள் மூலம் மாடுகளை கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், கால்நடை சந்தைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்து வடிவில் ஒப்புதல் அளித்த பிறகே அந்த கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும்.
பரிசோதிக்க வேண்டும்
கால்நடைகளை விற்பனை செய்கிறபோது, தன்னை விவசாயி என்று நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களிடம் மட்டுமே கால்நடைகளை விற்க முடியும். கால்நடைகள் சந்தையில் நுழைவதற்கு முன்பு அவற்றை கால்நடை ஆய்வாளர்கள் பரிசோதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் நேற்று முன்தினம் உப்பிடமங்கலத்தில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் எதிர்பார்த்தபடி மாடுகள் விற்பனைக்கு வரவில்லை. தொடர்ந்து நேற்று நடைபெற்ற சந்தையில் 20 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 10 மாடுகள் மட்டுமே விற்பனையானது. இதனால் நேற்று மாடுகளை வாங்க உப்பிடமங்கலம் மாட்டுச்சந்தைக்கு வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
பாதிப்பு
இதுகுறித்து மாட்டு தரகர்கள் கூறுகையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த உத்தரவால் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்க முடியாமலும், வாங்க முடியாமலும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பாதிப்பு விவசாயிகளுக்கு தான். கால்நடைகளை நம்பி வாழும் ஏழை- எளிய மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தையை நம்பி பிழைப்பு நடத்தும் நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்றனர்.
மாட்டு இறைச்சி விற்பனை
தொடர்ந்து மாட்டுச்சந்தையை குத்தகைக்கு ஏலம் எடுத்தவர் கூறுகையில், மத்திய அரசு தடை சட்டத்தினால் எங்களுடைய முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் ஏலம் எடுத்த தொகையை எப்படி ஈடு செய்வது என்று தெரியவில்லை என்றனர்.
இந்த நிலையில் உப்பிடமங்கலம் வாரச்சந்தையில் உள்ள மாட்டு இறைச்சி கூடத்தில் நேற்று எந்தவித சலனமும் இன்றி மாட்டு இறைச்சி விற்பனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.