மாவட்ட செய்திகள்

நெல்லையில் பரபரப்பு: மோடி-அமித்ஷா பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய டிரைவர் கைது

முகநூலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா பற்றி அவதூறு பரப்பிய நெல்லை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது.

நெல்லை,

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைகளை வெட்டி எடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என முகநூலில் பதிவான அவதூறான செய்தி வைரலாக பரவியது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த முத்துபாண்டி என்பவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபுவிடம் புகார் செய்தார்.

அவருடைய உத்தரவின் பேரிலும், போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் ஆலோசனையின் பேரிலும் மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

முதற் கட்டமாக முகநூலில் இருந்த அந்த பதிவை மற்றவர்களுக்கு அனுப்ப முடியாத அளவில் முடக்கினர். போலீசார் நடத்திய விசாரணையில், அவதூறு பரப்பியவர், நெல்லையை அடுத்த ராமையன்பட்டி அருகே உள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்த சுப்பையா மகன் செல்லத்துரை என்ற அப்துர்ரகுமான் என்பது தெரியவந்தது.

இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு செல்லத்துரை என்ற தனது பெயருடன் அப்துர் ரகுமான் என்று சேர்த்து கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர், சென்னையில் குடும்பத்துடன் குடியேறினார். அங்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கால் டாக்சி டிரைவராக வேலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அப்துர் ரகுமான், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பூர்வீக சொத்து விற்க வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் காயல்பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்தனர். அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் அப்துர் ரகுமான் குளிக்க வந்தார். அப்போது அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அப்துர் ரகுமானை நெல்லை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை பற்றி அவதூறு கருத்து பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததையும் மற்றும் இந்தி மொழியை கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதையும் ஒப்புக்கொண்டார்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அப்துர் ரகுமானுக்கு தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்துர் ரகுமானை கைது செய்தனர். அவரிடம் இருந்து நவீன செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை போலீசார் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவரை வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு பாபு உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அப்துர்ரகுமான் செல்போனில் பதிவான எண்களை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முகநூலில் வேறு ஏதாவது அவதூறு தகவல்கள் பதிவிடப்பட்டு உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு