தேனி:
அமைச்சர் ஆய்வு
தேனி உழவர் சந்தையில் உள்ள ஆவின் பாலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று காலை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து பெரியகுளம் சாலை, மதுரை சாலையில் உள்ள ஆவின் பாலகம், தேனி தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆவின் பாலகங்களில் ஆவின் உற்பத்தி பொருட்கள் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா? விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா? என அவர் ஆய்வு செய்தார்.
அப்போது ஆவின் பாலகங்களில் பொருட்கள் வாங்க வந்த மக்களுக்கு பால், தயிர், நெய், ஐஸ் கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் பணியில் அமைச்சர் ஈடுபட்டார். ஆய்வு செய்த ஒவ்வொரு இடத்திலும் சிறிது நேரம் விற்பனையாளராக மாறி பொதுமக்களிடம் பொருட்களை விற்று அதற்குரிய பணத்தை பெற்று கடை விற்பனையாளரிடம் ஒப்படைத்தார்.
ராஜேந்திர பாலாஜி
பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலேயே ரூ.83 கோடி சிக்கியது.
ஊழல் செய்துள்ள 10 அமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமி பெயரும் உள்ளது. இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் அவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு போனார்.
ஐகோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. உடனே போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இன்று வரை அவர் தலைமறைவாகவே உள்ளார். 8 தனிப்படைகள் அவரை தேடி வருகிறது.
திடுக்கிடும் தகவல்கள்
ஆவின் நிறுவனத்தில் ராஜேந்திர பாலாஜி செய்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. காத்திருங்கள், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும். சட்டம் தனது கடமையை செய்யும். யார் ஊழல் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு, மு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது என்று ராஜேந்திர பாலாஜி கூறினார். ஆனால் இன்று அவரால் தான் நடமாட முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் நடந்த பால்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் முரளிதரன், ஆவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுப்பையன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், தேனி மாவட்ட ஆவின் பொது மேலாளர் பாலபூபதி, பால் வளத்துறை துணைப் பதிவாளர் சண்முகநதி, தேனி ஆவின் உதவி பொது மேலாளர் சரவணமுத்து, தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.