கோவில் மூடல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் துலுக்காத்தம்மன் மற்றும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில்களை நிர்வாகிப்பதில் அதே பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக இருதரப்பினரும் பலமுறை கூடி பேசியும் தீர்வு ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ரா பவுர்ணமி விழாவினை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் கோவில் பிரச்சினையால் அசாம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக கும்மிடிப்பூண்டி போலீசார் மேற்கண்ட சிவன் கோவிலை பாதுகாப்பு கருதி பூட்டினர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில், கோவில் பூட்டப்பட்டதால் அதிருப்தி அடைந்த கிராம மக்களில் சிலரும், ஒரு தரப்பு புகார் தாரர்களும் கடந்த 15-ம் தேதி கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து தற்காலிக சமாதானம் ஏற்படுத்தப்பட்டு சிவன் கோவில் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது.
மேலும் கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தாசில்தார் ராமன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
அப்போது, ஏற்கனவே நிர்வாகத்தில் உள்ள 10 பேரை தவிர மற்றொரு தரப்பை சேர்ந்த 2 பேரை புதிதாக சேர்த்திட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிதாக 2 பேரை நியமனம் செய்வது போல தங்களுடைய தரப்பில் மேலும் ஒருவரை நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கூச்சல், குழப்பம்
இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே அதிகாரிகள் முன்னிலையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல், குழப்பம் நிலவியது.
இதன் பின்னர், நேற்று இரவு முடிவடைந்த இந்த சமாதானபேச்சு வார்த்தை கூட்டத்தின் மூலம் மற்றொரு தரப்பில் இருந்து புதிதாக 2 நிர்வாகிகளை நியமனம் செய்வது, கோவில் பணத்தை நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வங்கியில் செலுத்துவது மற்றும் இரு தரப்பினரும் ஒன்றிணைந்து கோவில் வளர்சிக்கு செயல்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.