மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி பற்றி பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை எடியூரப்பா சாடல்

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மட்டுமே நடந்துள்ளது என்றும், பிரதமர் மோடி பற்றி பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கொப்பல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவை பக்கத்தில் வைத்து கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு கூறுவதாகவும், இவ்வாறு குற்றச்சாட்டு கூற பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து நேற்று பெங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நான் ஊழலில் ஈடுபட்டதாகவும், சிறைக்கு சென்று வந்திருப்பதாகவும் சித்தராமையா அடிக்கடி சொல்லி வருகிறார். என் மீதுள்ள வழக்குகளை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்று கோர்ட்டில் நிரூபித்துள்ளேன். அப்படி இருந்தும் நான் சிறைக்கு சென்று வந்ததாக சித்தராமையா கூறுவது கண்டிக்கத்தக்கது. கடந்த 4 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. சித்தராமையாவும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளவர்களும் ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். அரசின் கஜானாவை முழுமையாக கொள்ளையடித்ததே சித்தராமையாவின் சாதனையாகும்.

கர்நாடக வரலாற்றிலேயே அரசின் கஜானாவை கொள்ளையடித்து ஊழலில் ஈடுபட்ட ஒரே முதல்-மந்திரி சித்தராமையா தான். அவரை போல கீழ்த்தரமான முதல்-மந்திரியை நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட சித்தராமையாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. ஊழலில் ஈடுபட்ட ஆனந்த்சிங்கை அருகில் வைத்து கொண்டு ராகுல்காந்தி பல்லாரியில் பேசினார். ராகுல்காந்தி, சோனியா காந்தி மீது வழக்குகள் இல்லையா?. அவர்கள் மீது உள்ள வழக்குகள் தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருவதை சித்தராமையா மறந்து விடக்கூடாது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு