பெங்களூரு,
பெங்களூரு ஹெப்பாலில் கர்நாடக அரசின் விதை கழகம் சார்பில் விதை பவன், பயிற்சி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, புதிய கட்டிடங்களை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து பேசியதாவது:-
முன்பு விவசாயிகள் தங்களுக்கு தேவையான தரமான விதைகளை அவர்களே தயாரித்து கொண்டனர். ஆனால் இந்த நிலைமை மாறி தற்போது தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் விதைகளை நம்பியே விவசாயிகள் உள்ளனர். இந்த விதைகள் தரமற்றதாகவும், விலை அதிகமாகவும் உள்ளது. இதற்கு கடிவாளம் போட வேண்டியது அவசியம்.
தரமான விதைகள்
விவசாயிகள் தாங்களே விதைகளை உற்பத்தி செய்துகொள்ள இந்த விதை கழகம் மற்றும் விவசாயத்துறை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான விதைகளை விதை கழகம் கொள்முதல் செய்ய வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் மற்றும் உரம் வழங்குவதில் எந்த குறைபாட்டையும் வைக்கவில்லை.
முந்தைய பா.ஜனதா அரசில் விதைகளுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது பா.ஜனதா அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. எங்கள் அரசில் இத்தகைய நிலை வரவில்லை. நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான ஆட்சியை நடத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு விதை, உரம் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று மந்திரி கிருஷ்ண பைரேகவுடாவுக்கு பதவி ஏற்றதும் உத்தரவிட்டேன். அதன்படி அவர் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
விழாவில், விவசாயத்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.