செங்கோட்டை,
செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 77). இவருடைய மனைவி கோமதி (70). இவர்கள் இரவில் வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்மநபர், வீட்டின் கதவை சாமர்த்தியமாக திறந்து உள்ளே சென்றுள்ளார்.
கோமதி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை லாவகமாக பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து கோமதி பார்த்தபோது, தனது கழுத்தில் கிடந்த சங்கிலி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதே பகுதியில் வசித்து வருபவர் சந்தரகுட்டி (43). இவருடைய மனைவி பகவதி (34). இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இரவில் வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மர்மநபர் சாமர்த்தியமாக வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். பின்னர், பகவதி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தபோது, அவர் விழித்துக் கொண்டார். சங்கிலியை கைகளால் இறுக பற்றிக் கொண்டு, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதனால் உஷார் அடைந்த மர்மநபர், பகவதியிடம் வேகமாக சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். மர்மநபர் பறித்ததில், சங்கிலி பாதியாக அறுந்தது. இதில் 2 பவுன் சங்கிலி பகவதியிடம் மாட்டிக் கொண்டது.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் புளியரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இரண்டு திருட்டும் ஒரே நாளில் நடந்துள்ளதால் திருடர்கள் நன்கு நோட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு நபர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.