கோவை,
புதிய தலைமுறை டி.வி. சார்பில், கோவை பீளமேட்டில் உள்ள ஒரு அரங்கத்தில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சினிமா டைரக்டர் அமீர், இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டைரக்டர் அமீர் கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார்.
மேலும் வருகிற 9-ந்தேதிக்குள் 2 நபர் ஜாமீன் வழங்குவதற்கான சொத்து ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து டைரக்டர் அமீர் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் ஆவணங்களை தாக்கல் செய்தார்.
அப்போது 2 நபருக்கான சொத்து பிணை பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை நீதிபதி கண்ணன் ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் கோர்ட்டை விட்டு வெளியே வந்த டைரக்டர் அமீர், நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை சமூகவிரோத அமைப்புகள் என்று முத்திரை குத்துவது சரியல்ல. தமிழ்நாட்டில் பேச்சுரிமை, கருத்துரிமை நசுக்கப்படுவது சர்வாதிகார செயலாகும். கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் என் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய முயன்றனர். தற்போது நான் முன்ஜாமீன் பெற்றுள்ளேன்.
ஆனால் என்னை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அளித்த புகார் மனு மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. நான் எப்போதும் நீதிமன்றத்தை நம்புகிறேன். அடக்குமுறைகள் மேலோங்கும்போது நீதிமன்றங்கள்தான் நல்ல தீர்ப்புகளை வழங்குகின்றன.
8 வழிச்சாலையை எதிர்த்து, சேலத்தில் மக்கள் அவர்களின் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள். இதனை ஒடுக்குவது அதிகார வர்க்கத்தின் பாசிச போக்கு ஆகும். எந்த அமைப்பும், யாரும் போராட்டத்தை தூண்டி விடுவதில்லை.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது மக்களிடம் போராடும் சிந்தனை வரக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் சமூக விரோத கும்பல்தான் என்று குறிப்பிட்ட சிலரை தேர்வு செய்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.