மாவட்ட செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினை குறித்த மனுக்கள் பெற சிறப்பு மையம்

குடிநீர் பிரச்சினைகள் குறித்த மனுக்கள் பெற திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக குடிநீர் பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு எளிதாக மனு கொடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதற்கிடையே கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி மற்ற மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது திருப்பூர் ஆவரங்காடு தோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் பகுதியில் ஏராளமானவர்கள் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் காம்பேக்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நாங்கள் குடியிருந்து வரும் பகுதியில் இருந்து 100 அடி தூரத்தில் மிகப்பெரிய பாய்லர் வைத்து தொழில் செய்து வருகிறார்கள்.

இதில் இருந்து தீப்பொறி தினமும் எங்களது வீட்டின் அருகே வந்து விழுகிறது. அந்த நிறுவனத்தினர் இதனை முறையாக பராமரிப்பதில்லை. மேலும், சாம்பல் துகள்கள் ஆங்காங்கே பறந்து வருவதால் உணவு உண்ண முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து அதன் உரிமையாளர் மாசாணத்திடம் பலமுறை எடுத்துக்கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு பறந்து வரும் தீப்பொறி வீட்டில் உள்ள சிலிண்டரில் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும்.

இந்த அச்சத்தில் தினமும் வாழ்ந்து வருகிறோம். கடந்த 25-ந் தேதி தீப்பொறி விழுந்து துணிகள் எரிந்து நாசமானது. இது குறித்து உரிமையாளரிடம் தெரிவித்தோம். அப்போது அவர் எங்களை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை தட்டிக்கேட்ட போது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் வேலையாட்கள் மற்றும் டிரைவர்கள் எங்களது பகுதியில் வசிக்கும் அலமேலு மங்கை மற்றும் அவருடைய மகன் கிஷோர் மற்றும் சரவணன் ஆகியோரை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இந்த காம்பேக்டிங் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த நிறுவனத்தில் இருக்கும் பாய்லரை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வி மற்றும் அவரது கணவர் மணி ஆகியோர் கொடுத்த மனுவில் எனது மகன் பார்த்தீபன் (வயது 23) என்ஜினீயரிங் படித்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவை மருத்துவக்கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த வாகனம் மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். எனது ஒரே ஒரு மகன் இறந்த நிலையில் நானும், எனது கணவரும் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எனது மகனின் இறப்புக்கு நிவாரண நிதி வழங்கி எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நல்லூர் நுகர்வோர் நலமன்றத்தினர் கொடுத்த மனுவில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் அல்லது ஸ்கேன் சென்டரில் உடல் பரிசோதனைக்காக செல்லும் போது உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி கட்டணமாக சுமார் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறப்படுகிறது. ஏழை மக்கள் நலம் பெற தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்தார். அதனை காலதாமதம் இன்றி விரைவாக அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில் பொதுமக்கள் சிரமம் இன்றி மின் இணைப்பு பெறுவது குறித்த விழிப்புணர்வு பதாகைகள் தொ.மு.ச. சார்பில் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் வைக்க அனுமதி வழங்க வேண்டும். இணையதளத்தில் புதிய மின் இணைப்பு பதிவு செய்யும் பொதுமக்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி புதிய இணைப்பு பெற வழிவகை செய்ய வேண்டும் என்றிருந்தனர்.

திராவிட தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். கோவை மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்ய முயன்ற காதலர்கள் கனகராஜ், வர்தினி. இதில் கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதுபோல் திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலமுருகன் என்பவர் கொடுத்த மனுவில் கடந்த 8 ஆண்டுகளாக நடமாட முடியாத நிலையில் உள்ளேன். மனைவி மற்றும் மகள் உள்ளனர். 2 ஆண்டுகளாக எனக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த ஒரு ஆண்டாக வழங்கப்படவில்லை. உடல்நிலை காரணமாக ஆதார் அட்டை எடுக்க முடியாமல் இருப்பதால், உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு