விருதுநகர்,
ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். நேறறு ராஜபாளையம் நகர் பகுதியில் ஆண்டாள் கோவில் விநாயகர் கோவில் முன்பு, ஆர். ஆர்.நகர் ஜங்ஷன், பொன்னகரம் பி.ஏசி.ஆர் திருமண மண்டபம், முன்பு, தெற்கு வடக்கு அழகைநகர் ஜங்ஷன், மலையடிப்பட்டி ஆர்ச் சர்ச் நான்கு முக்கு ஜங்சன், வடக்கு, மலையடிப்பட்டி நான்குமுககு ஜங்சன், ஆவாரம்பட்டி முக்கு மைதானம், மாடசாமி கோவில் தெரு அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் அமைச்சர் பேசும்போது, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகத்தில் ஆன்மிக கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியின் வேட்பாளராக நான் ராஜபாளையம் தொகுதியில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக போட்டியிடுகின்றேன். உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு நீங்கள் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். நான் ராஜபாளையத்தில் தங்கிதான் மக்கள் பணியாற்றுவேன். எனக்கு இங்கு விவசாய இடங்கள் உள்ளது. ஏற்கனவே நான் வாரத்துக்கு மூன்று நாட்கள் ராஜபாளையத்தில்தான் இருப்பேன். இனி முழு நேரமும் உங்களோடு இருந்து உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கின்றேன். ராஜபாளையம் நகரம் ஒரு ஆன்மீக நகரம். ராஜபாளையம் எனது ராஜ ஆலயம். ராஜபாளையம் மக்கள் ஒரு ஆன்மீக தொண்டு செய்கின்ற மக்கள். தெருவிற்கு இங்கு மூன்று கோயில்கள் உள்ளது. எல்லா பகுதிகளிலும் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. நான் செல்கின்ற இடமெல்லாம் கோயிலுக்குத்தான் வரச் சொல்கிறார்கள். இன்று மட்டும் 20க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று சாமி கும்பிட்டேன். நான் 10 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றிய காலங்களில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகள் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலம் உட்பட ஏராளமான பணிகளை செய்து கொடுத்துள்ளேன்.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இரண்டு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். ஏராளமான பணிகளை செய்து கொடுத்துவிட்டு நான் உங்கள் முன் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டம், கூட்டுக் குடிநீருக்காக பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். 2மாத காலத்திற்கு பணிகள் முடிந்து விடும். கொரானா வைரஸ் தாக்குதலினால் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் ஊருக்கு சென்று விட்டதால் தொடர்ச்சியாக பணிகளை மேற்கொள்ள முடியாமல். அதனால்தான் காலதாமதம் ஆகிவிட்டது. 10ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் எனக்கு இருப்பதினால் நீங்கள் நினைக்கின்ற திட்டங்களை என்னால் இந்த தொகுதிக்கு கொண்டு வரமுடியும். அனைவரும் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.