மாவட்ட செய்திகள்

மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 475 பேர் கைது

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து நேற்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 475 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன.

எனினும் வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரை பொறுத்தவரையில் நேற்று காலை முதல் வழக்கம்போல பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. நகைக்கடைகள், ஒருசில பெரிய ஜவுளி கடைகள் மட்டுமே திறக்கப்படவில்லை. காய்கறி மார்க்கெட்டிலும் அனைத்து கடைகளும் நேற்று வழக்கம் போல திறந்திருந்தன. இதனால் முழு அடைப்புக்கான அறிகுறியே தெரியவில்லை.

அதேபோன்று அரசு மற்றும் தனியார் பஸ்களும் வழக்கம்போல நேற்று இயக்கப்பட்டது. ஆட்டோக்களும் ஓடியது. முழு அடைப்பின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேலூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட், மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ்பாதுகாப்புடன் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மேலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். வேலூரில் தெற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி மற்றும் தி.மு.க., அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டனர்.

அவர்கள் பழைய மீன்மார்க்கெட், சாரதிமாளிகை, பழைய பஸ்நிலையம், வடக்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று மக்கான் சிக்னல் பகுதியில் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 150 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர் ரவி தலைமையில் நடைபெற்ற மறியலில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குமரன், ஒன்றிய துணை செயலாளர் சத்யானந்தம், ஒன்றிய காங்கிரஸ் தலைவர் வீராங்கன், கம்யூனிஸ்டு கட்சி துரைசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குடியாத்தத்தை அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கு.லிங்கமுத்து உள்பட தோழமை கட்சியினர் கலந்துகொண்டனர்.

குடியாத்தம் புதிய பஸ்நிலையம் அருகே நகர பொறுப்பாளர் சவுந்தர்ராஜன் தலைமையில் நடந்த மறியலில் நிர்வாகி நெடுஞ்செழியன், முன்னாள் கவுன்சிலர்கள் அரசு, ஜெயக்குமார், பாஸ்கரன், வக்கீல் சுந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லபாண்டியன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கே.ஆர்.கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் நகர செயலாளர் விவேகானந்தன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், செங்குட்டுவன் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர். ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு, சந்தைகோடியூர், இடையம்பட்டி, பார்சம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு நடைபெற்றது.

தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி தலைமையில், முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் 30 பேரை கைது செய்தனர்.

ஆம்பூரில் தி.மு.க. நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் தலைமையில், ரெயில் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் நகர செயலாளர் ஆர்.எஸ்.ஆனந்தன் சாமுவேல்செல்லபாண்டியன், லட்சுமிகாந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓம்.பிரகாசம், எம்.ஜி.ஆர். கழக மாநில செய்தி தொடர்பாளர் சிவக்குமார் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மாதனூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாதனூர் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலரை ஆம்பூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

அதேபோன்று திருப்பத்தூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் உள்பட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. வாலாஜாவில் காந்தி எம்.எல்.ஏ., ஆற்காட்டில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. என மாவட்டம் முழுவதும் 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 475 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு