மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் தண்ணீர் செல்ல சூரம்பட்டி அணைக்கட்டு உயரத்தை அதிகரிக்க மண் மூட்டை அடுக்கி வைப்பு

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு சூரம்பட்டி அணைக்கட்டின் உயரத்தை அதிகரிக்க மண் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது வெட்டப்பட்ட வாய்க்காலை அவரே திறந்து வைத்தார். அதன்பின்னர் முறையான பராமரிப்பு இல்லாமல் 25 ஆண்டுகளாக வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்கால் துர்வாரப்பட்டது. மேலும், ஈரோடை அமைப்பு உள்ளிட்ட தனியார் அமைப்புகளின் சார்பில் சூரம்பட்டி அணைக்கட்டும் தூர்வாரப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் மழை பெய்தது. இதனால் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. சுமார் 13 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆனால் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் சற்று மேடாக இருப்பதால் தண்ணீர் மிகவும் மெதுவாக செல்கிறது. மேலும், அணைக்கட்டு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து கிடக்கிறது. இதனால் பச்சை நிற போர்வை போர்த்தியது போன்று அணைக்கட்டு காட்சி அளிக்கிறது. இதன் காரணமாகவும் வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் வேகம் குறைந்து உள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் அதிலிருந்து வெளியாகும் கசிவுநீர் அணைக்கட்டுக்கு வரத்தொடங்கி உள்ளது. எனவே அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க அணையின் உயரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அணையில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் தண்ணீர் மெதுவாக செல்கிறது. தற்போது லக்காபுரம் அருகே கருக்காம்பாளையம் வரை தண்ணீர் சென்று உள்ளது. இதனால் சாஸ்திரிநகர், மூலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் குறைந்து இருக்கிறது.

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் கடைமடை பகுதி வரை தண்ணீர் சீராக செல்வதற்காக அணைக்கட்டின் உயரத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக சுமார் 3 அடி உயரத்துக்கு மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து கசிவு நீர் அணைக்கட்டுக்கு வர இருப்பதால் கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு திறந்துவிடப்படும். இதனால் வாய்க்காலில் தண்ணீர் வேகமாக செல்லும்.

அணைக்கட்டின் உயரத்தை நிரந்தரமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தண்ணீர் தேங்கும் அளவு கணக்கிடப்படும். அதன்பின்னர் அணைக்கட்டின் உயரத்தை நிரந்தரமாக அதிகரிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை