ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப்பணிகள், நடைபெற்று முடிந்த பணிகள், பொதுநிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்பட பல்வேறு பணிகள் குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தை சுற்றி பார்வையிட்டபோது அங்கு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்காக வழங்கப்பட்ட பேனர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை பார்த்த கலெக்டர் இவற்றை ஏன் ஊராட்சி பகுதிகளுக்கு வழங்காமல் இங்கு குவித்து வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். பின்னர் உடனடியாக ஊராட்சிகளுக்கு வழங்கி அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.
அப்போது கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் நாய்க்கன்தோப்பு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவி என்பவர், நாய்க்கன்தோப்பு - எல்லாசிகுடிசை செல்லும் தார் சாலை தனிநபர் பெயரில் உள்ளது அதனை அரசு பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார். அதேபோல் திமிரி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும் என மனு கொடுத்தார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, செந்தாமரை உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.