மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

காரிமங்கலம் அருகே குடும்பத்தகராறில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே உள்ள கெஜல்நாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் முருகன்(22). இவருடைய மனைவி மதுமிதா (வயது 19). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் மதுமிதா கெஜல்நாயக்கனஅள்ளியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். முருகன் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் வாரத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் மது மிதாவை கணவன் முருகன் தர்மபுரியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பி.காம். படிக்க சேர்த்துவிட்டார். மதுமிதா கல்லூரிக்கு சென்று வந்தார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த முருகனுக்கும், மதுமிதாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

இந்தநிலையில் மதுமிதா வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுப்பெண் மதுமிதா குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மதுமிதா சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தரப்பில் புகார் தெரிவித்து உள்ளனர். திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் புதுப்பெண் மதுமிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் ராமமூர்த்தி விசாரணைக்கு நடத்தி வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு