ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பின்னர் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி நகரில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை தொடர்ந்து அரை மணி நேரம் பெய்தது. ஊட்டி சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பதிவானது.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-10.8, குந்தா-7, எமரால்டு -9, கெத்தை-21, கிண்ணக்கொரை-19, அப்பர்பவானி -7, பாலகொலா-20, குன்னூர்-4, பர்லியார்-10, கேத்தி -14, கோத்தகிரி-3, கோடநாடு-14 உள்பட மாவட்டம் முழுவதும் 159.8 பதிவாகி உள்ளது. இதன் சராசரி 5.51 மி.மீ. ஆகும். கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.