குடியாத்தம், மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
குடியாத்தம்
குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் 16 வயது மகள் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார், இந்த மாணவிக்கும், மாதனூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை (புதன்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.
இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சியாமளா, சமூக நல அலுவலர் தாட்சாயிணி, சைல்டுலைன் மணிசேகர், கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று இரு தரப்பினரையும் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து மாணவிக்கு 16 வயதே ஆவதால் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று அறிவுரை கூறினார்கள்.
இதனையடுத்து அந்த மாணவிக்கு உரிய வயது வந்தபின் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் உறுதியளித்தனர். இதனால் மாணவிக்கு நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.