மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 மாத குழந்தையை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம் - கைதான மளிகைக்கடைக்காரர் பரபரப்பு வாக்குமூலம்

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 3 மாதமே ஆன ஆண் குழந்தையை மளிகைக்கடைக்காரர் துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள காம்பட்டு கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 30), தனது வீட்டின் அருகில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ராஜேஸ்வரி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு ராஜேஸ்வரி கர்ப்பமானார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சர்வேஸ்வரன் என்று பெயரிட்டனர்.

ராஜேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன், அவரிடம் அது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சர்வேஸ்வரனை கொலை செய்ய அவர் முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு மனைவி, குழந்தையுடன் கார்த்திகேயன் தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் திடீரென எழுந்த கார்த்திகேயன் தூங்கிக்கொண்டிருந்த சர்வேஸ்வரனை கொடுவாளால் தலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இதில் குழந்தையின் உடல் துண்டு துண்டாக சிதறி விழுந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி சத்தம் போட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற கார்த்திகேயனை அவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார், திருவண்ணாமலை புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச் சித்திரா மற்றும் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் நேரில் சென்று கார்த்திகேயனை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் 9-ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனக்கும் கொழுந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 3 வருடத்துக்கு மேலாக குழந்தை இல்லை. 3 மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு சர்வேஸ்வரன் என்று பெயர் வைத்தோம்.

என் மனைவியின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகம் இருந்து வந்தது. இதனால் சர்வேஸ்வரன் எனக்கு பிறந்திருக்கமாட்டான் என்று தோன்றியது. எவனுக்கோ பிறந்த குழந்தை, என்னை நாளைக்கு அப்பா என்று கூப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.

சர்வேஸ்வரனை பார்க்கும்போதெல்லாம் எனது மனைவி தவறான வழியில் குழந்தை பெற்ற ஞாபகம் தான் எனக்கு வரும். அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனை கொன்று விடலாம் என்று நினைத்து இருந்தேன். நான் இதை அடிக்கடி எனது மனைவி மற்றும் தந்தையிடமும் கூறியிருக்கிறேன்.

ஆனால் அவர்கள் என்னை கேலி செய்வதுபோல் பேசுவார்கள். குழந்தை சர்வேஸ்வரன் இருக்கும் வரை எனக்கு இந்த அவமானம் இருக்கும் என்று என் உள் மனதுக்குள் தோன்றியது. இவனை உறுதியாக கொன்று விட முடிவு செய்தேன். நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் நான் மளிகை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தேன். நானும், என் மனைவியும் சாப்பிட்டோம்.

பின்னர் ஹாலில் குழந்தை சர்வேஸ்வரனை படுக்க வைத்தோம். என் அப்பா வழக்கம்போல் படுக்கை அறையில் படுத்துக்கொண்டார். இரவு 10 மணியளவில் வீட்டில் விறகு வெட்டுவதற்காக பயன்படுத்தும் கொடுவாளை எடுத்து சர்வேஸ்வரனின் தலையில் ஓங்கி வெட்டினேன். மூளையும் ரத்தமும் சிதறி என் மனைவியின் மேல்பட்டது. உடனே என் மனைவி எழுந்து விட்டாள். நான் வெட்டிக்கொண்டே இருந்தேன். என் மனைவி கதறினாள். என் அப்பா ஓடி வந்து என்னாட இப்படி பண்ணிட்ட என்று சொல்லி நான் வெட்டுவதை தடுத்து கொடுவாளை பிடுங்கினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் வந்து என்னை சுற்றிவளைத்து பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்