கொளத்தூர்,
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 43), மீனவர். இவருடைய மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழககர்நாடக எல்லையில் உள்ள அடிபாலாறு பகுதியில் பழனி மீன் பிடித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து கர்நாடக மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொல்லப்பட்ட பழனியின் பிரேத பரிசோதனை அறிக்கையை கர்நாடக மாநில போலீசாரிடம் அவரது மனைவி சாந்தா பலமுறை கேட்டுள்ளார். ஆனால், அந்த அறிக்கையை தர கர்நாடக மாநில போலீசார் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
மனித உரிமை ஆணையத்தில் மனு
இந்த நிலையில் சென்னையில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் நேற்று முன்தினம் சாந்தா ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது கணவர் பழனியின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், கர்நாடக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுவரை கொலை செய்தவர்களில் ஒருவரைகூட கைது செய்யவில்லை. மேலும் எனது கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை என்னிடம் கொடுக்கப்படவில்லை. பலமுறை நேரிலும், தபால் மூலம் கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
தற்போது என்னிடம் வக்கீல் வைக்கக்கூட வசதி இல்லை. எனவே, தாங்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உதவி செய்யுமாறும், எனது கணவரின் கொலைக்கு நீதி பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.