நாமக்கல்,
தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் நாமக்கல் நகராட்சி அதிகாரிகளால் துணிக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி மாதம் நடத்தப்பட்ட சோதனையில் 24 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் பிப்ரவரி மாதம் 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், கடந்த மாதம் 49 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் ஏப்ரல் மாதத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நாமக்கல்-பரமத்தி ரோட்டில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 12 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை நகராட்சி அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தமாக 160 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.