பட்டிவீரன்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. இக்கோவில், சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
வருடந்தோறும் தை மாதம் 3-ந்தேதி இந்த கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு வருகை தரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில், திருவிழாவின் போது கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் வழங்கிய பட்டாடைகள் அணிவிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவதற்காக, பட்டறைகளில் தயார் செய்து வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்களை அங்கிருந்து மேளதாளத்துடன், வாணவேடிக்கை முழங்க ஊரின் முக்கிய வீதிகள் வழியாக கோவில் சாமியாடிகள், கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து அரிவாள்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த அரிவாள்களை கோட்டை கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபாடு செய்தனர். இந்த அரிவாள்கள் பெரும்பாலும் இரும்பு தகடுகளால் செய்யப்பட்டு இருந்தன.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய அரிவாள்கள் 2 அடி முதல் 20 அடி உயரம் வரை இருந்தன. அரிவாள்கள் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரே பிடியில் 2 முதல் 21 அரிவாள்கள் வரை இருந்தன. மணியுடன் கூடிய அரிவாள்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.
இரும்பு, மரத்தினால் அரிவாள்களுக்கான பிடிகள் செய்யப்பட்டிருந்தன. அரிவாள்களில் கருப்பணசாமியின் உருவம், காணிக்கை செலுத்திய பக்தர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே பக்தர் ஒருவர், ஒரு பவுன் எடையுள்ள தங்கத்திலான அரிவாளை கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்தி அசத்தினார்.
திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அரிவாள்களை செய்து கொடுக்கும் பணியில் முத்துலாபுரத்தில் 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரையாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மார்கழி 1-ந்தேதி தொடங்கி, தை 2-ந்தேதியான திருவிழாவுக்கு முந்தைய நாள் வரை விரதம் இருந்து அரிவாள்கள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.