மாவட்ட செய்திகள்

தென்காசி கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் பாகிஸ்தான் நாட்டு பணம் - தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினார்கள்

பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான தென்காசி கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் பாகிஸ்தான் நாட்டு பணத்தை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

தென்காசி,

கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. பிரமுகரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். சிலர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை தடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று புகார் செய்யப்பட்டது. இந்த கொலையை கண்டித்து பா.ஜ.க. வினரும், இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த படுகொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறப்பு குழுவை அமைத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே மத்தளம்பாறையில் கோழிப்பண்ணை நடத்தி வரும் ஷாலி என்ற மைதீன் அகமது ஷாலி (வயது 51) என்பவரை விசாரணைக்காக கடந்த 25-ந் தேதி கேரள மாநிலம் கொச்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை கொச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்வீர் சிங் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை தென்காசிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், தென்காசி போலீசாருடன் சென்று தென்காசி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தெருவில் உள்ள மைதீன் அகமது ஷாலியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து எகிப்து, பாகிஸ்தான், கத்தார், ஈரான் நாட்டு பணம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.

இதுதொடர்பாக மைதீன் அகமது ஷாலியின் உறவினர்கள் கூறுகையில், இந்த வழக்கில் அவர் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும், இந்த கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை. வக்கீலை சந்திக்க அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறினர். இந்த திடீர் சோதனை காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

இந்தநிலையில் தேனிக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் 2 பேர் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு மத வகுப்பு எடுக்கும் பள்ளிக்கு சென்றனர். அங்கு அவர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு வேன், இந்த கொலை வழக்கில் தொடர்புடையது என்று தெரியவந்தது. அந்த வேன் சென்னை பதிவு எண்ணை கொண்டது. இதையடுத்து அந்த வேனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்