மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே பயங்கரம், வீட்டில் தூங்கிய விவசாயி வெட்டிக்கொலை; மனைவி படுகாயம் - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

ஆம்பூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியும் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53), விவசாயி. இவருடைய மனைவி விஜயா (45). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். முருகேசனின் தம்பி வெங்கடேசன் (45), தேவலாபுரம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்து கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்துவிட்டார். வெங்கடேசனுக்கு சித்ரா (43) என்ற மனைவியும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

முருகேசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 குடும்பத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேசன் இறந்துவிட்டதால் அவருக்கு ரூ.3 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கடனாக முருகேசனுக்கு சித்ரா கொடுத்துள்ளார். அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து சித்ரா ஊர் முழுக்க சொல்லி உள்ளார். இதனால் முருகேசனுக்கும், சித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் முருகேசன் இதுபற்றி சித்ராவின் தம்பி சுந்தரவடிவேலுவிடம் கூறியதாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து சுந்தரவடிவேலு தனது அக்காளிடம் ஏன் இப்படி செய்கிறாய்?. நாளைக்கு என்னையும் இப்படித்தான் சொல்வாய் என்று கூறி தான் சித்ராவிடம் வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு கோபத்துடன் சென்றதாக தெரிகிறது. தம்பி கோபத்துடன் செல்ல முருகேசன் தான் காரணம் என கருதி நேற்று முன்தினம் இரவில் சித்ரா அரிவாளுடன் முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முருகேசனும், விஜயாவும் தூங்கி கொண்டிருந்தனர்.

இதனையடுத்து கணவன் - மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு சித்ரா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விஜயா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது முருகேசன் பிணமாக கிடப்பதையும், விஜயா படுகாயத்துடன் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்துவிட்டு காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் சித்ரா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கும், எனது கணவரின் அண்ணன் முருகேசனுக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு இருந்தது. எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகள் இறந்துவிட்டன. எங்களது சொத்தை அனுபவிக்க குழந்தையை செய்வினை செய்து கொன்று இருக்கலாம் என்ற எண்ணம் இருந்து வந்தது. மேலும் அதன்பின்பு பிறந்த ஒரு ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டது. தற்போது ஒரு மகள் மட்டும் உள்ளார்.

மேலும் எனது கணவர் இறந்ததற்கு வந்த பணத்தில் முருகேசன் ரூ.10 ஆயிரம் வாங்கி அதனை திரும்பி தரவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த சம்பவம் குறித்து எனது தம்பியிடம் முருகேசன் கூறியது பிடிக்காத காரணத்தால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று கருதி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்