வேலூர்,
வேலூரில் விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு வீட்டு வசதிவாரிய குடியிருப்பிலும் சிலை வைத்து வழிபாடு நடந்தது. நேற்று ஊர்வலத்தின்போது சிலை வைத்த விழாக்குழுவினருக்கும், தனியார் காவலாளி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த காவலாளி தனக்கு தெரிந்த நபர்கள் சுமார் 15 பேரை அழைத்துக் கொண்டு அரசு குடியிருப்புக்கு வந்தார். அவர்கள் திடீரென அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
இதையடுத்து குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதற்கு சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரியும் மனு அளித்தனர். அப்போது போலீசார் அதை வாங்க மறுத்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தனியாக மனு கொடுக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து கையெழுத்து போட்ட பொது மனுவை அளிக்கக்கூடாது என்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.