மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் செம்பன். இவருடைய மகன் நாகராஜ். விவசாயி. இவர் கடந்த 19-ந்தேதி விருவீடு கிராமத்தில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த விபத்தில் படுகாயமடைந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
உடல் உறுப்புகள் தானம்
இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க மனைவி, மகன்கள், மகள்கள் முன்வந்தனர்.
இதைத்தொடர்ந்து நாகராஜின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியவை ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. மதுரை அரசு மருத்துவமனையிலேயே இந்த ஆபரேஷன் நடந்தது.
அகற்றப்பட்ட கல்லீரல், மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு உடல் உறுப்பு செயல் இழப்பால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், மதுரை அரசு மருத்துவமனையிலேயே மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
இதன்மூலம் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது.
நாகராஜின் கண்கள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டன.
மலர்வளையம் வைத்து மரியாதை
பின்னர் நாகராஜின் உடலுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) மருதுபாண்டியன், டாக்டர் செல்வராஜ், உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த உடல் உறுப்பு மாற்று ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை, டிரான்ஸ்டன் அமைப்பு, மதுரை அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து செய்திருந்தன.
நரம்பியல் துறை நிபுணர்களான டாக்டர்கள் மருதுபாண்டியன், ஸ்ரீதர், மயக்கவியல் துறை பேராசிரியர் கணேஷ்பிரபு, துணை பேராசிரியர் சிவபிரசாத், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ராஜா, சிறுநீரக நிபுணர் டாக்டர் அருள், இருதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ரத்தினவேல் ஆகியோர் இந்த ஆபரேஷனை செய்து சாதனை படைத்தனர்.
இத்தகைய உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சையை மதுரை அரசு மருத்துவமனையிலேயே டாக்டர்கள் செய்திருப்பது இதுவே முதன்முறையாகும்.