மாவட்ட செய்திகள்

சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை காற்றில் பறந்து விழுந்ததில் மூதாட்டி பலி

வையம்பட்டி அருகே சுங்கச்சாவடியில் இருந்த அறிவிப்பு பலகை ஒன்று காற்றில் பறந்து வந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார். இதைஅறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலம்பட்டி அருகே உள்ள பாலப்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 60). இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். வழக்கமாக இவர் ஆடுகளை பொன்னம்பலம்பட்டி பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்து செல்வார். இதே போல் நேற்று காலையும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதிக்கு ஓட்டி வந்தார்.

ஆடுகளை காட்டுப் பகுதியில் மேயவிட்டுவிட்டு, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி அருகே அமர்ந்து இருந்தார். அப்போது, காற்று பலமாக வீசி கொண்டிருந்தது. இந்நிலையில் சுங்கச்சாவடி அருகே வாகனம் எந்த லைனில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை பலத்த காற்று வீசியதால் பாதி உடைந்து பறந்து சென்று பொன்னம்மாள் மீது விழுந்தது. இதில் பொன்னம்மாள் படுகாயமடைந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பொன்னம்மாளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அங்கு வந்த சுங்கச்சாவடிக்கான ஆம்புலன்ஸ் வேன் ஊழியர்கள் மூதாட்டி இறந்து விட்டதாக கூறி சென்று விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு தெரிந்ததும், அவர்களும் வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர்கள் வாசுகி, கென்னடி மற்றும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் ஏற்கனவே அறிவிப்பு பலகை ஒரு முறை இதே போல் உடைந்து விழுந்த போது, அதை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் உடைந்த அறிவிப்பு பலகையை அப்படியே மீண்டும் அதே இடத்தில் வைத்து கட்டிச் சென்றனர். இதனால் தான் தற்போது அந்த அறிவிப்பு பலகை காற்றில் பறந்து வந்து விழுந்து மூதாட்டி இறந்துள்ளார். எனவே இந்த உயிரிழப்பிற்கு சுங்கச்சாவடியினர் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த மூதாட்டியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மறியலை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக வந்த திரைப்பட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் சம்பவம் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு காவல்துறையினரிடமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இருப்பினும் மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் பொன்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்