நெல்லை,
நெல்லையை அடுத்த தாழையூத்தைச் சேர்ந்தவர் முகமது அலி(வயது 29). நகைக்கடை உரிமையாளர். இவர், மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, நேற்று அதிகாலையில் தனியாக காரில் புறப்பட்டு சென்றார்.
அதிகாலை 5 மணியளவில் நெல்லை அருகே உள்ள தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட கயத்தாறு புறவழிச்சாலை ரோடு நாற்கர சாலை மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென்று சாலையின் குறுக்காக ஒரு நாய் ஓடியது. இதனால் நிலைதடுமாறிய கார், மேம்பாலத்தின் இடதுபக்க தடுப்பு சுவரில் மோதி நின்றது. அப்போது காரின் கதவுகள் திறக்க முடியாதவாறு பூட்டிக் கொண்டன. மேலும் காரின் என்ஜினில் இருந்து குபு, குபுவென்று புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது அலி உடனடியாக காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியில் வந்தார்.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசம் அடைந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்தபோது சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழாததால் அதிர்ஷ்டவசமாக முகமது அலி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.