மாவட்ட செய்திகள்

இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் - சித்தராமையா பேட்டி

இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று சித்தராமையா கூறினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஜமகண்டி, ராமநகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் ஆனந்த் நியாமகவுடா நேற்று கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார். இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மனு தாக்கலுக்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். ஆனால் ஆட்சி கவிழ்ந்துவிட்டதா என்ன?. பல்லாரியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அங்குள்ள அனைத்து நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே உக்ரப்பாவை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம்.

எங்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பார்கள். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதன்படி காங்கிரஸ் 2 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 3 தொகுதியிலும் போட்டியிட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று சித்தராமையா கூறினார்.

ஜமகண்டியில் கட்சியின் முன்னணி நிர்வாகி சுசில்குமார் தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். தேர்தல் பணிகளில் இருந்து அவர் விலகி இருந்தார். அவரை சித்தராமையா சந்தித்து, வரும் நாட்களில் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவி வழங்குவதாகவும், அதிருப்தியை கைவிட்டு காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றும்படியும் கூறினார். அதை ஏற்று அவர் தனது அதிருப்தியை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு