நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ரெயில்வே கேட் அருகே தர்மபுரி - சேலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அதில் ரத்தத்துடன் பாட்டில்கள், பஞ்சுகள், மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை குவிந்து கிடக்கிறது. மேலும் கால்நடைகள் மருத்துவ கழிவுகளை கிளறிவிட்டு செல்வதால் சாலையின் நடுவே ஆங்காங்கே பாட்டில்கள் சிதறி கிடக்கிறது.
இதனால் பொதுமக்களின் கால்களில் பாட்டில்கள், ஊசிகள் குத்தும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, அதியமான்கோட்டை ரெயில்வே கேட் அருகே கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை அழிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் துப்புரவு பணியாளர்கள் மருத்துவ கழிவுகளை தீ வைத்து அழித்தனர்.
மேலும் இப்பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ கழிவு கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.