மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் 13-ந்தேதி நடக்கிறது

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் 13-ந்தேதி நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தமிழக சட்டசபையில் வரும் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மறுநாள் (14-ந்தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டில் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் சில நாட்கள் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த சட்டசபை கூட்டத் தொடரில், ஆளுங்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காக, வரும் 13-ந்தேதி மாலை 5 மணிக்கு அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பாக, தி.மு.க. தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 13-8-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு