மாவட்ட செய்திகள்

நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர்,கிளீனர் நசுங்கி பலி

கயத்தாறு அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர், கிளீனர் பலியாகினர்

கயத்தாறு:

கயத்தாறு அருகே விபத்தில் சிக்கி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர், கிளீனர் உடல் நசுங்கி பலியானார்கள்.

இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

ரப்பர் லாரி

நாகர்கோவிலில் இருந்து ரப்பர் மற்றும் தென்னை நார்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நாகர்கோவில் வடசேரி மேலக்கழுங்கடி பகுதியை சேர்ந்த யோகோபு மகன் பால்ராஜ் (வயது 45) என்பவர் ஓட்டினார். கிளீனராக நாகர்கோவில் பூதப்பாண்டி தெள்ளந்தி கிராமத்தை சேர்ந்த கென்னடி (53) என்பவர் இருந்தார்.

இந்த லாரி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற சிலிண்டர் லாரி மீது ரப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

2 லாரிகளும் நின்றன

இதையடுத்து 2 லாரிகளும் அதே இடத்தில் நிறுத்தப்பட்டன. பின்னர் சிலிண்டர் பாரம் ஏற்றி வந்த லாரியை அதன் டிரைவர் அருகில் ரோட்டோரம் கொண்டு சென்று நிறுத்தினார். ரப்பர் ஏற்றி வந்த லாரியை டிரைவர் பால்ராஜ் அதே இடத்தில் நிறுத்தி இருந்தார்.

அப்போது பால்ராஜ் பணிபுரியும் நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் தெருவைச்சேர்ந்த முருகன் (50) என்பவர் ஓட்டி வந்தார். ரப்பர் லாரி அருகில் வந்ததும் முருகன் தனது லாரியை அங்கு நிறுத்தி விட்டு அதில் இருந்து இறங்கினார்.

டிரைவர், கிளீனர் பலி

பின்னர் முருகனும், கென்னடியும் ரப்பர் லாரியின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து பலாப்பழம் ஏற்றிக் கொண்டு மராட்டியம் நோக்கி சென்ற இன்னொரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை ரோஷன் என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக ருஷிகேஷ் இருந்தார்.

எதிர்பாராதவிதமாக பலாப்பழம் ஏற்றி வந்த லாரி திடீரென ரப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அந்த லாரியின் அருகில் நின்று கெண்டிருந்த டிரைவர் முருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கிளீனர் கென்னடி பலத்த காயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆம்புலன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டது. அதில் கென்னடியை ஏற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

2 பேர் படுகாயம்

இதுதவிர பலாப்பழ லாரி டிரைவர் ரோஷன், கிளீனர் ருஷிகேஷ் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் லாரியில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். கங்கைகொண்டானில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

விபத்தில் பலியான கிளீனர் கென்னடிக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்